Saturday, February 11, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF ) – மூன்றாவது கூட்டம் !அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக மூன்றாவது கூட்டமாக இன்று (10-02-2012 )  அஸர் தொழுகைப்பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, M.M.S. சேக் நசுருதீன் தலைவர் – AAMF )அவர்கள் தலைமையில், பேராசிரியர்  M.A.முகமது அப்துல் காதர் ( செயலாளர் – AAMF ) அவர்கள் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம் அவர்கள் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.
AAMF ’ன் முதல் கூட்டமாக மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் AAMF ன் வளர்ச்சிகள் மற்றும் ஹஜ்ரத் பிலால் நகர் மற்றும் ஆதம் நகர் ( M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய )ஆகிய இரு முஹல்லாக்களையும் இணைத்து ஒன்பது முஹல்லாவாக செயல்படுவது என்பது தீர்மானம் செய்யப்பட்டது.
AAMF ’ன் இரண்டாவது கூட்டமாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் கட்டுப்பாடற்ற முறையில் உயர்ந்து வருகிற கட்டிட பணியாளர்களின் கூலிகளை நிர்ணயம் செய்வது மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்வது போன்றவைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதியில் சகோ. K. சலீம் ( தாஜுல் இஸ்லாம் சங்கம் ) அவர்களின் தலைமையில் தலா ஒருவர் வீதம் ஒன்பது முஹல்லாவிலிருந்தும் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அவசரக்கூட்டமாக நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின்  ( AAMF சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமிப்பது என்று மரைக்காயர் பள்ளியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் முன்னிலையில், M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்றக் கூட்டத்தில் அனைத்து முஹல்லாவைச் சேர்ந்த அதன் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் நிரலாக.......................
·         அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF), ஊர் ஒற்றுமை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒழுங்கு முறையை பின்பற்றுவது போன்ற நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டப்பட்டது.
·         அதிரையில் உள்ள இஸ்லாமிய பொது அமைப்புகளுக்கு குறிப்பாக  அதிரை பைத்துல்மால் மற்றும் எந்த ஒரு அமைப்பிற்கும் போட்டியாகவோ அல்லது அவர்களின் செயல் திட்டங்களில் குறுக்கீடுகள் செய்வதையோ விரும்ப மாட்டோம். மேலும் எங்களின் ஒத்துழைப்புகள்  AAMF ’ன் பங்களிப்பாக அனைத்து அமைப்புகளுக்கும் இருக்கும் ( இன்ஷா அல்லாஹ் ! ) என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
·         நமதூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக நமதூரைச் சேர்ந்த சகோதர்கள் மீது வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. இவர்கள் படுகிற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்குகளிலிருந்து இவர்களை விடுவிக்க முயற்சி செய்வது தொடர்பாக பேசப்பட்டது. மேலும் இவ்வழக்குகளை கையாள்வதற்கு சகோ. மான் A. நெய்னா முகமது ( துணை-பொருளாளர் – கீழத்தெரு முஹல்லா ) அவர்களின் தலைமையில் ஒரு குழு நியமிகபட்டது குறிப்பிடத்தக்கது.
·         பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம் அவர்களின் சுகாதார விழிப்புணர்வு அறிவிப்பு சம்பந்தமாக கொடுக்கப்பட்ட மனுவை எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
·         அனைத்து முஹல்லவை சார்ந்த பள்ளிகளிலும் “மக்தப்” களை ஏற்படுத்தி இதன் மூலம் நமது சமுதாயம் சார்ந்த சிறுவர், சிறுமிகளுக்கு மார்க்க கல்வியை குறிப்பாக குரான் ஓதும் பயிற்சிகள், ஹதீஸ்களின் விளக்கங்கள், சூராக்கள் மனனம், இஸ்லாமிய பொது அறிவு கேள்வி-வினாக்கள் போன்றவைகள் நடத்தப்பட வேண்டியது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
·         நமதூரில் கந்து வட்டியின் கொடுமையில் சிக்கி தவிக்கும் அப்பாவி சகோதர, சகோதரிகளை இனங்கண்டு அக்கொடுமையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது தொடர்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
·         அமீரக கிளையின் சார்பாக சகோ. V.T. அஜ்மல்கான் ( செயலாளர் - AAMF அமீரக கிளை )அவர்கள் மூலம் கொடுத்தனுப்பிய வேண்டுகோள்கள் வாசிக்கப்பட்டது. குறிப்பாக  'உலமாக்கள் குழு' என்ற ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அமீரக அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக வைக்கப்பட்ட வேண்டுகோளில்......

உலமாக்கள் குழு ஏன் வேண்டும் ?
பொதுவாக ஒரு சமூகத்தில் வாழ்கிற மக்களுக்குநன்மையை ஏவுவதற்கும்தீமையைத் தடுப்பதற்கும்ஒரு குழு இருக்க அல்லாஹ்வும்,முஹம்மது(ஸல்) அவர்களும் நமக்கு பின்வருமாறு வலியுருத்துகிறார்கள்:

நம்பிக்கை கொண்ட ஆண்களும்பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்: ஞானமிக்கவன். (அத்தவ்பா 9:71)
நன்மையை ஏவிதீமையைத் தடுத்துநல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (ஆலு இம்ரான் 3:104)

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால்(சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.     
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)நூல்: முஸ்லிம் 78
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலும்கருணை புரிவதிலும் பரிவு காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களின் நிலையானதுஓர் உடலின் நிலையைப் போன்றதாகும். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால்அதனுடன் மற்ற உறுப்புகளும் (சோர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சலும் கண்டுவிடுகிறது. அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)நூல்: முஸ்லிம் 5044, புகாரி 6011

இன்று நமது சமுதாயத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை பெரும்பாலோர் சரியான மார்க்க ஞானத்திற்கும்முறையாக வழிகாட்டலுக்கும் அதிகம் தேவையுள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே மேற்கூறப்பட்ட இறை வசனங்கள் மற்றும் நபிமொழிகளுக்கிணங்க சமுதாயச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட ஒரு குழு நமது சமூகத்தில் இருப்பது மார்க்க கடமையாகும். எனவேஅல்குர்ஆன் மற்றும் நபிவிழியின் அடிப்படையில் அந்த உயர்ந்த பணியை நிறைவேற்றி இறை திருப்தியை அடைய வேண்டும் என்ற தூய எண்ணத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பினர் நமதூருக்கு பொதுவாக 'உலமாக்கள் குழு' ஒன்றை துவங்க வேண்டியது அவசியம் என அமீரகம் AAMF-னர் கருதுகிறோம்.

'இவ்வுலமாக்கள் குழு' சார்பாக நமதூரில் அவசியம் செய்ய வேண்டிய பணிகளில் சில வருமாறு:

1. நமதூரில் நடைபெற்று வருகிற மார்க்க விரோத சீர்கேடுகளையும்அனாச்சாரங்களையும் களைவதற்கு தொடர்ச்சியான மார்க்க உபதேச வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இன்று நமதூரில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் வாரந்தேரும் வியாழக் கிழமைகளில் இஷா  தொழுகைக்கு பிறகு அந்தந்த காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மார்க்க சொற்பொழிவுகள் நிகழ்த்த ஏற்பாடு செய்ய வேண்டும். இச்சொற்பொழிவு நிகழ்ச்சிகள் குறித்து ஒவ்வொரு பள்ளியிலும் பொது அறிவிப்பு செய்துஅம்முஹல்லாவில் உள்ள ஆண்களும்பெண்களும் பங்கேற்கும் வகையில் வசதிகள் செய்ய வேண்டும். 
இன்ஷாஅல்லாஹ் இதன் மூலம் நமது சமூகத்தில் நடைபெற்று வரும் சீர்கேடுகளையும்அனாச்சாரங்களையும் (வரதட்சனைவட்டி,ஒழுக்கக்கேடான காரியங்கள்) களைவதுடன்நமதூர் மக்களுக்கு நல்லமுறையில் மார்க்க அறிவும்வழிகாட்டல்களும் கிடைக்க செய்ய முடியும் என அமீரக AAMF நம்புகிறோம்.

2. நமதூர் அனைத்து முஹல்லாவிலுள்ள வளரும் சிறுவர்களுக்கு குர்ஆன் ஓதுவதற்கும்மார்க்க அறிவை பயிற்றுவிப்பதற்கும் 'உலமாக்கள் குழு'சார்பாக ஒரு சிறந்த பாடத் திட்டத்தை உருவாக்க வேண்டும். அப்பாடதிட்டத்தின்படி நமதூரில் இயங்குகிற ஆண்கள் மற்றும் பெண்கள் மதரஸாவில் படித்து வருகிற மாணவர்களைக் கொண்டு அனைத்து முஹல்லாவிலும் உள்ள பள்ளிவாசல்களில் காலையிலும்மாலையிலும் ஆரம்ப குர்ஆன் மக்தப் வகுப்புகள் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு தனித்தனியாக நடத்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஏற்படுத்த தீவிரமாக செயல்பட வேண்டும் என அமீரக AAMF கேட்டுக் கொள்கிறது.

3. நமதூர் அனைத்து முஹல்லாவிலுள்ள பருவ வயதை அடைந்த ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களிலேயே அல்லது ஒவ்வொரு முஹல்லாவிலோ கண்டிப்பாக - தீனியாத் வகுப்புகள் நடத்த வேண்டும். அப்படி நடத்தப்படுகிற தீன்யாத் வகுப்புகளில் தாய்-தந்தைகளுக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய மார்க்கம் கடமைகள்கணவன் - மனைவிகளின் பொறுப்புகள் குறித்த மார்க்க கடமைகள்குழந்தைகள் வளர்ப்பு முறைகள்முதுயோர்களை பேணி நடத்துவது போன்ற காரியங்களை கற்றுக் கொடுக்கும் வகையில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த வேண்டும் என அமீரக AAMF கேட்டுக் கொள்கிறது. ஏனெனில் எதிர்காலத்தில் நமது சமூகத்தில் தாய்-தந்தையர்களை கவனிக்காத பிள்ளைகள்,கணவன்-மனைவி சச்சரவுகள் போன்ற எண்னெற்ற கேடுகள் இல்லாத சமுதாய மலர பயனளிக்கும் என் அமீரக AAMF நம்புகிறது.

4. நமதூரில் உள்ள அனைத்து முஹல்லா சங்கங்களுக்கும் வருகிற தலாக்சொத்து பாகப்பிரிவு போன்ற விவகாரங்களுக்கு 'உலமாக்கள் குழு' மூலம்மார்க்க வழிகாட்டு முறைகளை பெற்று அவ்விவகாரங்களை ஒவ்வொரு முஹல்லா சங்க நிர்வாகமும் அனுகி தீர்த்துக் கொள்ளும் முறை ஏற்படுத்த வேண்டும் என அமீரக AAMF கேட்டுக் கொள்கிறது.

5. நமதூரில் எத்துனை பள்ளிவாசல்கள் உள்ளன. அந்தந்த பள்ளிகளின் நிர்வாகம் எவ்வாறு நடத்தப்பட்டு வருகிறது. எந்தெந்த பள்ளி நிர்வாகம் நலிந்த நிலையில் உள்ளன போன்ற விவரங்களை 'உலமாக்கள் குழு' மூலம் நமது தாயக AAMF தகவல்களை பெற வேண்டும் என வேண்டுகிறோம். அத்துடன் நமதூரில் ஜும்ஆக்கள் நடைபெற்று வருகிற அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வாரமும் நிகழ்த்தப்படுகிற குத்பாக்கள் ஒரே செய்தியை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக அமைத்துக் கொள்ள நமது 'உலமாக்கள் குழு' ஏற்பாடு செய்ய வேண்டும் என அமீரக  AAMF விரும்புகிறது.
 
இன்ஷாஅல்லாஹ் 'உலமாக்கள் குழு' தேவைக்கு ஏற்ப இன்னும் பல பணிகளை காலோட்டத்தில் சேர்த்து கொள்ளலாம்.

இவ்வேண்டுகோளை பரிசீலனைக்கு எடுத்து விவாதங்கள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் இறுதியாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட தரகர் தெரு “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ நிர்வாகத்திற்கு வாழ்த்துகள் பரிமாறப்பட்டு துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் வீதம் என முடிவு செய்யப்பட்டு அடுத்த கூட்டமாக “ கீழத்தெரு முஹல்லாவில் “ வருகிற 23-03-2012  அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.
Tuesday, February 7, 2012

(AAMF) யின் சார்பாக லண்டன் இந்திய தூதரக அதிகாரிக்கு அகல ரயில் பாதை சமந்தமாக மனு ஒன்று கொடுத்துள்ளனர்

அஸ்ஸலாமு அலைக்கும்

லண்டன் (AAMF) யின் சார்பாக லண்டன் இந்திய தூதரக அதிகாரியை நமதூர் அகல ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். அது சமயம் லண்டன் (AAMF) ஒருங்கிணைப்பாளர் S.A. இம்தியாஸ் அஹமது லண்டன் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணை தலைவர் டாக்டர். கபீர் காக்கா அவர்களும் இந்திய தூதரக அதிகாரிக்கு பரிசாக அரபியிலும்(translate) ஆங்கிலத்தில் உள்ள குர்ஆனை வழங்கியுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு லண்டன் வாழ் (AAMF) யின் சகோதரர்கள். அவருக்கு கொடுத்த கடிதத்தையும் இணைத்துள்ளோம்.
Monday, February 6, 2012

AAMF -இன் அறிவிப்பும் வேண்டுகோளும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) !

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த 14-01-2012 அன்று நடைப்பெற்ற அவசரக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி

நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமித்த செய்தி அனைவரும் அறிந்ததே.


இவர்களின் சம்பளத்தை காலம் தாழ்த்தாமல் செலுத்துவதற்கு ஏதுவாக லண்டன் வாழ் சம்சுல் இஸ்லாம் சங்கதிற்குட்பட்ட சகோதரர் லண்டனில் இருக்கும் காலம் வரை, ஒவ்வொரு மாதமும் ரூ.2,௦௦௦/- தருவதாக போருப்பேற்றுகொன்டுள்ளார். (Jazakallah Khair ).

இதுபோல், வெளிநாடு வாழ் அதிரை சகோதர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களால் இயன்ற நன்கொடையை தந்து உதவி இந்த நல்ல காரியத்தில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு சகோ.A .தமீம் -தலைவர், அமீரக கிளை. Mobile No : 00971 -50 -7480023 ,
Email : adiraiallmuhallah @gmail .com

இப்படிக்கு
AAMF நிர்வாகம்
அமீரக கிளை.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes