Monday, September 5, 2011

மாணவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தெரிந்துகொள்ள வேண்டும்


"இந்தியாவில், அதிகமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தும் மாநிலம் தமிழகம். மாணவ, மாணவியர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும்" என, மாநில தகவல் உரிமை ஆணையர் பெருமாள்சாமி பேசினார்.
ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை சார்பில், "தகவல் அறியும் உரிமை சட்டம்-2005&' என்ற தலைப்பில், ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.
தமிழ்நாடு மாநில தகவல் உரிமை ஆணையர் பெருமாள்சாமி பங்கேற்று பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள், மக்கள் வரிப்பணத்தில் இயங்குகிறது. இப்பணம் முறையாக பயன்படுத்த படுகிறதா என்பதை தெரிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டமானது, 1776ல் சுவீடன் நாட்டில் அறிமுகப்படுத்தபட்டது. இச்சட்டத்தை, காஷ்மீர் தவிர மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 1997ல் அறிமுகபடுத்தப்பட்ட இச்சட்டம், 2005ல் அமல்படுத்தபட்டு செயல்பட்டு வருகிறது. அரசு ஒளிவு மறைவில்லாமல் செயல்படுவதை மக்களுக்கு தெரியப்படுத்துதல், பணியாற்றுபவர்கள் துறையின் பொறுப்பை உணர்ந்து செயல்படவும், ஊழல் இல்லா நிர்வாகத்துக்கு இச்சட்டம் பயன்படுகிறது.
அரசு ஆவணங்களை தகுதிக்கு ஏற்ப முழுமையாக பார்க்க முடியும். இச்சட்டத்தின் மூலம் கேள்வி, விளக்கம், கோரிக்கை, நடவடிக்கை எடுப்பது போன்ற தகவல்களை பெறலாம். யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளை கேட்க முடியாது. அன்றாட பணிகளை பாதிக்கின்ற மாதிரியான கேள்விகளாக இருந்தால், மனுவை தள்ளுபடி செய்யலாம். தகவல் கொடுக்கவில்லை என்றால், அபராதம், தண்டனை உள்ளது. ஆனால், இதன் மூலம் அதிகாரிகளை மிரட்டுபவர்களுக்கு தண்டனை இச்சட்டத்தில் இல்லை. தகவல் கேட்டு, 30 நாட்கள் காத்திருக்கலாம். தகவல் தராத பட்சத்தில் கால தாமதத்துக்கு ஒரு நாளைக்கு, 250 ரூபாய் வீதம், 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். அதில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் அடங்குவர்.
இந்தியாவிலேயே அதிகமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தும் மாநிலம் தமிழகம்தான். மாணவ, மாணவியர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes